தவறு தான், என்னை விட்டு விடுங்கள் : கஸ்தூரி கெஞ்சல்
Follow my blog with Bloglovin
நடிகை கஸ்தூரி பரபரப்பான கருத்துக்களை கூறி தன்னை லைம் லைட்டில் வைத்துக் கொண்டிருப்பவர். அப்படி அவர் திருநங்கைகளை மையப்படுத்தி ஒரு கருத்தை சொல்லி சிக்கலில் மாட்டியிருக்கிறார். 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் ஒரு நீதிபதி சரி என்றும் ஒரு நீதிபதி தவறு என்றும் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை கஸ்தூரி திருநங்கைகளோடு ஒப்பிட்டு விமர்சித்ததோடு. திருநங்கைகள் படத்தையும் வெளியிட்டார்.
இது கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. திருநங்கைகள் பொங்கி எழுந்து கஸ்தூரி வீட்டு முன் துடைப்பத்துடன் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இது தொடர்பாக மதுரை போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் ஏற்கெனவே தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டு அதை நீக்கவும் செய்த கஸ்தூரி இப்போது மீண்டும் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இது தொடர்பாக நேற்று மீண்டும் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் வேடிக்கையாக பேசுவதாக நினைத்து தவறான கருத்தை பதிவு செய்து விட்டேன். அதனால் நான் மிகவும் மதிக்கும் நண்பர்கள் சகோதர, சகோதரிகளின் மனது வேதனைப்படுகிறது என்பதை அறிந்த உடனேயே அதை நீக்கி விட்டேன். அந்த கருத்துக்காக பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டு விட்டேன். குறிப்பிட்ட சமுதாய மக்களிடம் நேரடியாக எனது விளக்கத்தையும், வருத்தத்தையும் தெரிவித்து உள்ளேன். சமூக வலைத்தளங்களிலும் நேரடியாகவே திருநங்கைகளிடம் வருத்தத்தை தெரிவித்து மன்னிப்பு கேட்டு உள்ளேன். அவர்களும் என்னை பெருந்தன்மையாக மன்னித்து இதனை கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நீக்கப்பட்ட பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பரப்புகிறார்கள். இதனால் இது உண்மைக்கு புறம்பான சர்ச்சையாக மாறுகிறது. மீண்டும் மீண்டும் இந்த ஸ்கீரின் ஷாட்டை பரப்புவதால் எனது சகோதரிகளை கொச்சைப்படுத்தி காயப்படுத்துகிறீர்கள். என்னையும் காயப்படுத்துகிறீர்கள். நானும் மனுஷி தான். தவறு செய்யாமல் யாரும் இருக்க மாட்டார்கள். மறுபடியும் நான் தவறு செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அப்போது என்னை கண்டியுங்கள். இப்போது நான் செய்தது தவறு தான் விட்டு விடுங்கள். என்னோடு சேர்த்து ஒரு சமூகத்தின் உணர்வை காயப்படுத்த வேண்டாம்.
இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.