Top AD

Breaking News

இந்து சமுத்திர பிராந்தியத்தில் 30 தொன் போதை பொருள் மீட்பு





கடந்த ஐந்து மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் இந்து சமுத்திரத்தின் ஊடாக கடத்திச் செல்ல முற்பட்ட 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 30 தொன் போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளதுடன் இதற்கு பயன்படுத்தப்பட்ட 13 படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படையின் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் பியால் த சில்வா தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தில் ஒன்றிணைந்த கடல் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு கடற்படையினர் இவற்றை கைப்பற்றியதாக அவர் தெரிவித்தார்.

ஜனவரி முதல் ஜூன் வரையான கால பகுதிக்குள் இந்து சமுத்திரத்தின் வடபிராந்தியத்தை அண்மித்த நாடுகளைச் சேர்ந்த கடற்படையினர் மேற்கொண்ட மேற்படி ஒன்றிணைந்த நடவடிக்கைகளின் மூலம் இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்படவிருந்த பாரிய பாதிப்புக்களை தவிர்க்க முடிந்துள்ளதுடன் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளும் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வெளிநாட்டு கடற்படையினரால் இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 28.5 தொன் ஹஷீஸ் ரக போதைப் பொருளும் 2 தொன் ஹெரோயினும் அடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை கடற்படை 9 ஆவது வருடம் நடத்தவுள்ள காலி பேச்சுவார்த்தை “கோல் டயலோக்” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு இம்மாதம் எதிர்வரும் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.


கடற்படையின் நடவடிக்கை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் நிராஜ ஆட்டிகல, கடல் நடவடிக்கைப் பணிப்பாளர் கொமடோர் சஞ்ஜீவ டயஸ் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் கடற்படையின் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் பியால் த சில்வா மேலும் விளக்கமளிக்கையில் :-

இலங்கை உட்பட உலகின் எந்த நாட்டிற்கும் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை தனித்து செய்ய முடியாது. மாறாக ஒன்றிணைந்த செயற்பாடுகளின் மூலம் மாத்திரமே மேற்கொள்ள முடியும். இதற்கு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்புக்கு படையினரின் ஒத்துழைப்பு, புலனாய்வு தகவல்கள், அனுபவ பரிமாற்றம் போன்றன இன்றியமையாத ஒன்றாகும்.

இது போன்ற துறைசார் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு கோல் டயலொக் போன்ற மாநாடு சிறந்த பெறுபேற்றை பெற்றுத்தரும். எனவேதான் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலில் இலங்கை கடற்படையினால் நடத்தப்படும் இம்மாநாடு இம்முறை “ஓத்துழைப்புக்களின் மூலம் சமுத்திர முகாமைத்துவத்துக்காக ஒன்றிணைதல்” என்ற தொனிப் பொருளில் நடைபெறவுள்ளது.

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ள இந்த இருநாள் மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த 140 கடற்படை அதிகாரிகளும் 17 சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பெருமளவிலான உள்நாட்டு கடல்துறைசார் உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளதுடன் ஆறு அமர்வுகளின் போது 18 ஆய்வறிக்கைகள் சமர்பிக்கப்படவுள்ளன என்றார் ஸாதிக் ஷிஹான்.