132 குடும்பங்கள் வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்பு உதவிக்கரம் நீட்ட கோரும் மக்கள்
வவுனியா வடக்கில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேர், கனகராயன்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர், நைனாமடு கிராம அலுவலர் பிரிவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர், மன்னகுளம் கிராம அலுவலர் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேர், மாறா இலுப்பை கிராம அலுவலர் பிரிவில் ஓரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேர், கற்குளம் கிராம அலுவலர் பிரிவில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர், கனகராயன் குளம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேருமாக மொத்தம் 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒர் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. மேலும் 17 குடும்பங்களை சேர்ந்த 46 அங்கத்தவர்கள் வவுனியா வடக்கு ஊஞ்சல்கட்டி அ.த.க பாடசாலையில் தங்கவைக்கபட்டுள்ளனர். உதவிக்கரங்களை எங்கள் எல்லைக்கிராமங்கள் பக்கமும் மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது செய்கை செய்யப்பட்ட நெற்செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் கால்நடைகள் பல வெள்ள நீரில் சிக்கி காணாமல் போயுள்ளதுடன் வீடுகள் வியாபார நிலையங்களுக்குள் வெள்ளம் சென்றமையால் சொத்திழப்புக்களும் ஏற்ப்பட்டுள்ளன.