இலங்கையின் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையின் கரையோரப் பகுதிகளில் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அத்துடன் கடல் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக இத்தகைய வானிலை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசலாம் என்றும் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.