வெளிநாடொன்றில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் இளம் பெண் படுகொலை
அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் வைத்து இளம் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மெல்பேர்ன் வடக்கு பகுதியில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் Bundoora பகுதியில் இந்த கொலை நேற்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 21 வயதான Aya Masarwe என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண், LaTrobe - Bundoora பல்கலைக்ககழகத்தில் கல்வி கற்று வந்தவர் என்றும் அவுஸ்திரேலியாவில் கல்வியை தொடர்வதற்காக தற்காலிக விசாவில் தங்கியிருந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
LaTrobe பல்கலைக்கழகத்துக்கு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றை பார்வையிட்டதன் பின்னர் வீடு திரும்பும்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Bundoora பிரதேசத்திலுள்ள சன நெருக்கடிமிக்க பகுதியில் புதர்கள் நிறைந்த பகுதியொன்றுக்கு பின்னால் அப்பகுதியில் சென்ற பணியாட்கள் குறித்த பெண்ணை கண்டுபிடித்துள்ளனர்.
புதர்களின் பின்னால் இன்று காலையில் கண்டுபிடிக்கப்பட்ட போது இவர் குற்றுயிராக காணப்பட்டார் என்றும் அவரது உடலில் மூச்சு இருந்துகொண்டிருந்தது என்றும் கூறப்படுகிறது.
உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த காப்பாற்றும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. எனினும் அவர் இறந்து விட்டதாக பொலிஸார், தடயவியல் நிபுணர்கள், விசாரணை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
Bundoora பகுதிக்கு வருகின்ற Tram வாகனத்தில் முதல் நாள் பின்னிரவில் வந்து இறங்கிய Aya Masarwe வீடு செல்லும் வழியில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள். பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற வாய்ப்பை தாங்கள் மறுக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆனால் மரணத்துக்கான எந்த சாட்சிகளோ ஆதாரங்களோ எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
உயிரிழந்த பெண் Tram வாகனத்தில் வந்து இறங்கியதற்கான கமரா காட்சி, அந்தப்பகுதி வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலுள்ள CCTV கமரா காட்சிகள், அன்றிரவு அந்த பகுதியால் பயணம் செய்தவர்களின் வாகன கமரா (DashCam) காட்சிகள் என்று பல ஆதாரங்களை விசாணை செய்து வருகிறார்கள். பொதுமக்களிடமும் உதவியை கோரியிருக்கிறார்கள்.
இதுவரையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி குறிப்பிட்ட பெண்ணின் அடையாளம் மாத்திரமே உறுதி செய்யப்பட்டிருக்கிறது.